வருங்கால வைப்புநிதி சந்தா செலுத்த அவகாசம் - தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவிப்பு
வருங்கால வைப்புநிதி சந்தா செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தொழில்துறை முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதன் காரணமாக தொழில் நிறுவன உரிமையாளர்கள், வருவாய் இன்றி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தொழில் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கான மாத சந்தாவை, இ-சலான் வாயிலாக செலுத்துவார்கள். அப்போது, இ.சி.ஆர். என்ற மின்னணு ரசீது மற்றும் ரிட்டர்ன் படிவத்தையும், சந்தா தொகையையும் சேர்த்து தாக்கல் செய்வார்கள்.
ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் தற்போதைக்கு இ.சி.ஆர். படிவத்தை மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது. தொழிலாளர்களுக்கான சந்தா தொகையை, அரசு வழங்கும் காலக் கெடுவுக்குள் பின்னர் செலுத்தலாம்.
இந்தப் படிவத்தை தாக்கல் செய்வதன் வாயிலாக தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்க அரசு திட்டமிட்டால், அதை தொழில் நிறுவனங்கள் சுலபமாக பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.