ஊரடங்கு விதிமீறல்: 1 லட்சத்து 75 ஆயிரத்து 636 பேர் கைது; ஜாமீனில் விடுதலை

ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.68 லட்சத்து 57 ஆயிரத்து 344 அபராத தொகை வசூலாகி உள்ளது என காவல் துறை தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-13 08:31 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.  கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வரும் 14ந்தேதியுடன் இந்த உத்தரவு முடிவடைகிறது.  தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது.  சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படியும், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  எனினும், வாகனங்களில் சுற்றி திரியும் நபர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதுபற்றி தமிழக காவல் துறை வெளியிட்டு உள்ள செய்தியில், ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 636 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 1 லட்சத்து 39 ஆயிரத்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  1 லட்சத்து 63 ஆயிரத்து 477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.68 லட்சத்து 57 ஆயிரத்து 344 அபராத தொகை வசூலாகி உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்