தெற்கு ரெயில்வேயில் 573 ரெயில் பெட்டி ‘வார்டு’கள் தயார் - இலக்கை விட கூடுதலாக 100 பெட்டிகள் மாற்றப்பட்டன

தெற்கு ரெயில்வேயில் 573 ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் இலக்கை விட கூடுதலாக 100 பெட்டிகள் மாற்றப்பட்டன.

Update: 2020-04-12 19:38 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில், ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற ரெயில்வே வாரியம் முடிவு செய்தது. அதன்படி நாடு முழுவதும் 3.2 லட்சம் படுக்கைகளுடன், 20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்ற திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கி, 2,500 ரெயில் பெட்டிகள் முதலில் ‘வார்டு’களாக மாற்றும் பணி முடிந்து விட்டது. தெற்கு ரெயில்வேயில் 473 ரெயில் பெட்டிகள் ‘வார்டு’களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் இதுவரை 573 ரெயில் பெட்டிகள் ‘வார்டு’களாக மாற்றப்பட்டுள்ளன. கொடுத்த இலக்கை காட்டிலும் கூடுதலாக 100 ரெயில் பெட்டிகளை ‘வார்டு’களாக மாற்றி தெற்கு ரெயில்வே சாதனை படைத்துள்ளதை, ரெயில்வே வாரியம் பாராட்டி உள்ளது.

மேலும் செய்திகள்