தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தீவிரமடைந்து உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உள்ளது.
இதுபற்றி தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார்.
தமிழகத்தின் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்தது.
கோயம்புத்தூரில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை மொத்தமாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 45 வயது பெண் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனை தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.