காஞ்சீபுரத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்ட வெளிநாட்டவர் வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
திருச்சி சிறப்பு முகாமில் கொரானா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தங்க அனுமதி கோரி கொரியா நாட்டைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாவல் இண்டியா என்ற கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் ஜோ ஜே வோன். கொரியா நாட்டைச் சேர்ந்த இவர், வாடிக்கையாளரிடம் வசூலித்த ஜி.எஸ்.டி. வரி ரூ.40 கோடியே 37 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல், மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் கொடுத்தாலும், வெளிநாட்டைச் சேர்ந்த இவர் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் ஜோ ஜே வோன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘திருச்சி சிறப்பு முகாம் சுகாதாரமாக இல்லை. இங்கு தொடர்ந்து தங்கினால் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நான் இதுவரை தங்கியிருந்த ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் கிராமத்தில் வசிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, செல்போன் ‘வீடியோ கால்’ மூலம் திருச்சி சிறப்பு முகாம் தற்போது எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? அங்கு தற்போதுள்ள சுகாதார நிலை என்ன? என்பதை அதிகாரிகள் காண்பித்தனர்.
பின்னர் தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால், ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.பி.குமார் ஆகியோர், ‘மனுதாரர் மண்ணூர் கிராமத்தில் தங்கியிருக்கவில்லை. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க போலியான முகவரியை கொடுத்துள்ளார். இவர், சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் தங்கியிருந்தார். அவரும் அந்த அறையை காலி செய்துவிட்டார். எனவே இவரை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்தால், தாய் நாட்டிற்கு தப்பியோடி விடுவார்’ என்று வாதிட்டனர்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி சிறப்பு முகாமில் 80 பேர் வரை தங்கலாம். அங்கு தற்போது 73 பேர் மட்டும்தான் உள்ளனர். செல்போன் ‘வீடியோ கால்’ மூலம் பார்க்கும் போது முகாம் நல்ல சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுவது நன்றாக தெரிந்தது. மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொண்டு, அவரை வெளியில் தங்க இந்த ஐகோர்ட்டு அனுமதித்தால், சிறப்பு முகாமில் உள்ள ஒவ்வொருவராக இதுபோல வழக்கு தொடர தொடங்கவிடுவார்கள்.
அப்பாவியாக இருந்தாலும், குற்றவாளியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது மனிதனுக்கும், இயற்கைக்கும் நடந்துவரும் போர் என்பதை அனைவரும் உணரவேண்டும். இயற்கையை நோக்கி மனிதன் பயணப்படவில்லை என்றால், கண்டிப்பாக இயற்கை இந்த போரில் வெற்றி பெற்றுவிடும்.
எனவே, மனுதாரரை வெளியில் விட்டால், அவரது நாட்டிற்கு தப்பி ஓடிவிடுவார் என்பதை நம்பும்படியாக உள்ளது என்பதால், அவரது கோரிக்கையை நிராகரிக்கிறேன். இவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, திருச்சி சிறப்பு முகாமின் தற்போதைய நிலையை செல்போன் ‘வீடியோ கால்’ மூலம் பார்க்க முடிந்தது. எனவே, சாலை, நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலம் உள்ளிட்டவைகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளை, ‘வீடியோ கால்’ மூலம் விசாரித்தால், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் உண்மை நிலையை அறிய முடியும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.