ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த முடிவு- தலைமைச்செயலாளர்

ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

Update: 2020-04-11 13:20 GMT
சென்னை,

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.  

நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.  பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தினால் முழு பலன் கிடைக்காது. ஊரடங்கு தொடர்பாக பிரதமர் அறிவிக்கும் முடிவை தமிழகம் பின்பற்றும். பிரதமர் எத்தனை நாட்கள் அறிவிப்பார் என்பதை பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும். ஊரடங்கு நீட்டிப்பை பிரதமர் அறிவித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா ஆய்வகம் அமைக்க அனுமதி பெற உள்ளோம். ரேபிட் கிட் மட்டுமின்றி பிசிஆர் மூலமாக பரிசோதனை செய்தால் மட்டுமே ரிசல்ட் தெளிவாக கிடைக்கும்.  கொரோனா சோதனைக்கு தேவையான  மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது” இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்