தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 1,35,734 பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2020-04-10 06:18 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில மற்றும் மத்திய அரசுகள் தீவிரமுடன் பணியாற்றி வருகின்றன.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது.  வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய பணிகள் நடைபெற தடையில்லை.  அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பேரை தமிழக காவல் துறை கைது செய்துள்ளது.  பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை ரூ.45 லட்சத்து 13 ஆயிரத்து 544 அபராதம் விதிக்கப்பட்டு வசூலாகி உள்ளது.

இதேபோன்று 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  1 லட்சத்து 25 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்