கொரோனா வைரஸ் தடுப்புப்பணி: தமிழக அரசுக்கு, கி.வீரமணி பாராட்டு

கொரோனா வைரஸ் தடுப்புப்பணிக்காக தமிழக அரசுக்கு, கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-04 21:15 GMT
சென்னை, 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு பணியை பொறுத்தமட்டில் தமிழக அரசின் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவல்துறையின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

இந்த நேரத்தில் பலரையும் அழைத்து கருத்துரை, யோசனைகளை கேட்டு போர்க்காலத்தில் ஏற்படும் கூட்டுப் பொறுப்பாக அனைவரையும் ஈடுபடுத்தினால் மிகப்பெரிய ஒற்றுமை தழைத்தோங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

நிதி ஆதாரத்தை பொறுத்தமட்டில் மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு, மானிய பாக்கி, நிதி பாக்கி போன்றவற்றை உடனடியாக மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு மாநில அரசு அனைத்து எம்.பி., க்கள் மூலம் அழுத்தம் தரவேண்டியது அவசியம் ஆகும்.

இந்தநேரத்தில் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்க உதவும் உணவு பண்டங்கள், காய்கறிகளில் விலையேற்றி லாபம் தேட நினைக்க வேண்டாம் என்று வணிகர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைவிடப் பெரிய சமூக விரோத செயல் வேறில்லை என்பதை உணர வேண்டும். யார் மன்னித்தாலும், உங்கள் மனச்சாட்சி, உங்களை மன்னிக்காது.

கொள்முதல் கூடுதலானால் அரசிடம் உதவி கேளுங்கள். தன்னார்வ நிறுவனங்களின் உதவி கேளுங்கள். ஏழை, எளியவர்களுக்கு பசி தீர ஒத்துழையுங்கள். நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய முக்கியமான நேரம் இது. சமூகத்தை உலகத்தை காக்க அனைவரும் கடமையாற்ற முன்வருவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்