ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி 6-ந் தேதியோடு நிறுத்தம் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கான நிவாரண நிதியான ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி 6-ந் தேதியோடு நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;

Update: 2020-04-04 00:00 GMT
சென்னை,

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நிவாரண உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரலுக்கான அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் தேதி குறிப்பிட்ட டோக்கனும் வீடு, வீடாக சென்று வழங்கப்பட வேண்டும் .

3-ந் தேதி வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு நிவாரண உதவி தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் பணி முடிவடைந்தவுடன், வீடு, வீடாக சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்கப்படவேண்டும்.

4-ந் தேதிக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையும், பொருட்களும் வழங்க வேண்டும். இப்பணி முடிக்கப்பட்டவுடன் 4-ந் தேதியன்று வீடு, வீடாகச் சென்று டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்க வேண்டும்.

5-ந் தேதியன்று ரேஷன் கடைகள் இயங்காது. அன்று வீடு, வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கனும், நிவாரண உதவித் தொகையையும் வழங்க வேண்டும். அன்றைய தினமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிலுவையின்றி டோக்கனும், நிவாரண உதவித் தொகையும் வழங்கி முடிக்கப்படவேண்டும் .

6-ந் தேதியன்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படவேண்டும். விடுப்பட்டவர்களுக்கு விற்பனை முனைய எந்திரத்தின் மூலமாக நிவாரண உதவித் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படவேண்டும்.

7-ந் தேதியில் இருந்து டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நிவாரண உதவித் தொகை அங்கு வழங்கக்கூடாது .

மேலும் டோக்கன் வழங்கப்படும்போதே ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரவேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்க வேண்டும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளை கூடுதலாக திறப்பது தொடர்பாக 1-ந் தேதி வழங்கப்பட்ட சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்