சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் அறிமுகம்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்றுவரை 411 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த பாதிப்பு அவர்களுக்கும் பரவ கூடிய ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனுடன், அவரது 9 மாத கர்ப்பிணி மனைவியான மருத்துவருக்கும் தொற்று உறுதியானது.
இது போன்ற சூழலில், தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக 3 வகையான ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ரோபோக்கள் வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களின் அருகே சென்று அவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை, திட்டமிட்ட ப்ரோக்ராம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.