கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம்: தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் பாராட்டு
கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் என்று அறிவித்த தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் எழுதவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஏராளமான இயக்கங்களையும் நடத்தியிருக்கிறது. இந்தநிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதவேண்டும் என்ற அரசாணையை செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இது பா.ம.க.வின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இது வரவேற்கத்தக்கது. பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்படுவது கட்டாயம் என்பது குறித்த அரசாணையை பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்துவதுடன் மட்டும் தொழிலாளர் நல ஆணையரும், அரசும் ஒதுங்கிவிடக்கூடாது. அவ்வாறு ஒதுங்கினால் எந்த பயனும் ஏற்படாது. தொழிலாளர் நல ஆணையர் எச்சரித்தது போன்று தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 அபராதம் என்ற பழைய அணுகுமுறை நீடித்தால், அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மணக்கும் என்பது கனவாகவே இருக்கும். இத்தகைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டு கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டால் தான் பெயர்ப்பலகைகளை தமிழ் மொழிக்கு மாற்றும் அரசின் நோக்கம் நிறைவேறும். கடைகளின் பெயர்களில் உள்ள ஆங்கில பெயர்களை அப்படியே தமிழில் எழுதுவது கூடாது என்று எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலத்தில் Hot-el என்று இருந்தால் அதை தமிழில் ஓட்டல் என்று எழுதும் வழக்கம் உள்ளது. அதை தவிர்த்து உணவகம் என்று தனித்தமிழில் எழுதப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும். ஆனால் இந்த அறிவிப்பை செயல்பாட்டிலும் காட்டவேண்டும். அவ்வாறு செய்யும் போது தமிழகத்தின் தமிழ் தெருக்களில் நிச்சயம் தமிழ் மணக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.