தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் உள்ள பெயர்கள், முதன்மையாக பெரிய அளவில் தமிழில் இருக்க வேண்டும். அதன்கீழ் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் இடம் பெற வேண்டும்.
ஆனால் சில வணிக நிறுவனங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் உள்ளது. இதுபற்றி தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதேபோன்று அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டு உள்ள உத்தரவில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும். இந்த நடைமுறையை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.