பொங்கல் பரிசு திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
பொங்கல் பரிசு திட்டத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் நடைபெறாத மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, “உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டம், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது” என்றார்.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.