கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் என்ன? - மாணவர்களுக்கு, கல்வித்துறை அறிவுரை

கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Update: 2020-03-10 21:15 GMT
சென்னை, 

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, சளி, உடல் சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இவை அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஆகும்.

இந்த நோய் அறிகுறி உடையவர் இருமும்போது, தும்மும்போதும் வரும் எச்சில் மூலம் நேரடியாக பரவுகிறது. இது காற்றில் இருப்பதில்லை. ஆனால் மனிதன் பயன்படுத்தும் பொருட்களிலும், கைகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே கீழ்க்கண்ட தடுப்பு முறைகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

* மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுதல் வேண்டும்.

* இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும். இந்த நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும்.

* காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதையும், வெளி இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்