கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

Update: 2020-03-09 07:30 GMT
சென்னை,

சீனா உள்பட பல்வேறு நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் கால் பதித்துள்ளது. ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க என்ஜினீயருக்கு, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்துள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அரசு செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், போதிய மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பது பற்றியும் முதல்-அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

மேலும் செய்திகள்