மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
கொரோனா வைரஸ் எதிரொலியால் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். சுகாதாரத்துறை தகவல்களை தவிர வேறு எதையும் மக்கள் நம்ப வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியதில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ விதிகள் காரணமாக நோயாளியின் குறித்த துல்லிய தகவல்களை வெளியிடவில்லை.
மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கொரோனா பாதிப்பு உள்ளோரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுதை 100% தடுத்து வருகிறோம்.
சீனா, இத்தாலி, தென்கொரியா, ஜப்பானில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்து பொதுமாக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கொரோனா வைரசை தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.