தெலுங்கானா சட்டசபையில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்குறளை ஒன்றை வாசித்து அதற்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற பின்னர் அந்த மாநிலத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மரபுப்படி முதல் நாளான நேற்று கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், “அனைவருக்கும் வணக்கம்” என்று முதலில் தாய்மொழியாம் தமிழில் தனது குரலை ஒலிக்கச் செய்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் ஆங்கிலத்தில் கவர்னர் உரையை வாசித்தார்.
அவர் தனது உரையின் கடைசியாக “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்ற திருக்குறளை தமிழில் வாசித்து அதற்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். இதன் பொருள், ‘மிகுந்த பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடை பெறுவதே நாடு’ ஆகும்.
முன்னதாக டாக்டர் தமிழிசையை முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் சபாநாயகர் பொச்சாரம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் வரவேற்று சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தனர். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையை கேட்க, அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன் மற்றும் குடும்பத்தினர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர்.