தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடும் பனி கொட்டியது. தற்போது பனிக்காலம் விலகி, வெயில் காலம் தொடங்கிவிட்டது. இருப்பினும் ஓரிரு இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-
கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் ஒருசேர குவிவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நெல்லை, கன்னியாகுமரி, தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இயல்பான அளவிலேயே வெயில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.