அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க தொடர் நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
கிராமங்களிலிருந்து நகர்ப்பகுதிகள் வரை ஏழை மாணவ, மாணவியர் கல்வி கற்கத் தகுதியானவர்களாக இருந்தாலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வி கற்க இயலாத சூழ்நிலையை மாற்றி, அவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்க வேண்டுமென்ற தொலைநோக்குச் சிந்தனையோடு தமிழ்நாடு முழுவதும் 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை ஜெயலலிதா தான் வாழ்ந்த காலத்திலே அமைத்தார்.
ஜெயலலிதாவின் கொள்கையின் அடிப்படையில், அ.தி.மு.க. அரசு தற்பொழுது மேலும், 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் உருவாக்கியுள்ளது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றபொழுது 34 சதவீதமாக இருந்த உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை, இப்பொழுது 49 சதவீதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கின்றது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி பயிலத் தேவையான உபகரணங்களை வாங்கித் தருகின்றார்களோ இல்லையோ, ஜெயலலிதா பெறாத தாயாக இருந்து அக்குழந்தைகளுக்கு சிறப்பான, அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக சுமார் 12 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணினியை கொடுத்து, விலையில்லா சைக்கிள், புத்தகம், புத்தகப் பை என பல்வேறு கல்வி உபகரணங்களை கொடுத்து ஏழை, மாணவ, மாணவியர் கல்வி கற்க அடித்தளமாக விளங்கினார்.
ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் படிப்படியாக தரம் உயர்த்தியும், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியும், உயர்கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு மற்ற துறைகளை காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஏழை, மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தி கொண்டு இருக்கிறோம்.
கல்வியில் சிறக்கின்ற மாநிலம் தான் அனைத்து வளங்களும் பெறும். அங்கே அமைதி, பண்புகள் நிலவும், உயர்வு கிடைக்கும். இவ்வாறு அனைத்தும் கிடைக்கின்றபோது பொருளாதாரம் தானாக வந்து சேரும். ஆகவே, அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க எங்களுடைய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, இந்தப் பகுதி மக்கள் இந்தக் கல்லூரியை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து, மேலும், மேலும் பல்வேறு சிறப்புகளைப் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் வரவேற்று பேசினார்.
மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன், சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ரூ.1,167 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.34 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து 33,141 பயனாளிகளுக்கு ரூ.134 கோடியே 37 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.155¾ கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர்.
அதன் பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.
பின்னர் அங்கு ரூ.6 கோடியே 72 லட்சம் மதிப்பில் உயர் சிகிச்சைக்காக உள்ள நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை இயக்கி வைத்து முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.