காவேரி - கோதாவரி இணைப்பு: ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளை சந்தித்து பேச திட்டம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
காவேரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளை சந்தித்து திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.;
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரிநீரை வறட்சி பகுதிகளான மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்கம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எடப்பாடி அருகே இருப்பாளி ஊராட்சி மேட்டுப்பட்டி ஏரியில் நேற்று காலை நடந்தது.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் என்பது வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும்.
பருவமழை காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி அதன் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் அந்த உபரிநீரை மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விடும் மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் இன்னும் 11 மாதங்களில் நிறைவடையும். அதன்பிறகு இங்கு விழா நடக்கும் மேட்டுப்பட்டி ஏரி முழுவதும் நிரம்பி இருப்பதை காணமுடியும். அதன்பிறகு வேளாண் பணிகளுக்கும், குடிநீருக்கும் பிரச்சினை இருக்காது.
பொதுவாக ஒரு திட்டத்தை எளிதில் அறிவித்துவிடலாம். ஆனால் அதனை நிறைவேற்றுவது கடினம். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் குடிமராமத்து திட்டத்தை அறிவித்து முதற்கட்டமாக ரூ.100 கோடியில் 1,519 ஏரி, குளங்களை சீரமைக்க பரீட்சார்த்த முறையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1,513 ஏரி, குளங்களை தூர்வாரியும், அதன் கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் 2-ம் கட்டமாக ரூ.329 கோடியில் 1,511 ஏரிகளும், 3-ம் கட்டமாக ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளும் எடுத்துக்கொண்டு அங்கு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு தவறான குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். குடிமராமத்து திட்டம் விவசாயிகளின் பங்களிப்போடு தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏதாவது தெரிந்தால் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். தெரியாவிட்டால் அவர் பேசாமல் இருப்பது நல்லது.
காவிரி-கோதாவரி திட்டம் என்பது கனவு திட்டமாகும். அந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதனால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் பயன்பெறுவார்கள். தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் சேர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.64 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது.
ஆந்திர மாநில முதல்-மந்திரியுடன் காவேரி-கோதாவரி இணைப்பிற்கு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று நான் கடிதம் மூலமாக கேட்டிருந்தேன், அவரும் சம்மதித்துள்ளார். எனவே, முதற்கட்டமாக இன்றையதினம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும், ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து என்னுடைய கடிதத்தை அவர்களிடம் வழங்கி இருக்கிறார்கள்.
அதேபோல தெலுங்கானா முதல்-மந்திரியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம், அவர்களும் விரைந்து நேரம் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே, மூன்று முதல்-மந்திரிகளும் ஒன்றாக இணைந்து, ஜெயலலிதா கண்ட கனவு திட்டமான இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து, அதனை மத்திய அரசிடம் சமர்ப்பித்து நிறைவேற்றுவோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இதனால் தமிழகத்தில் உள்ள வறண்ட பகுதிகள் அனைத்தும் செழிக்கும்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பியது போக 2-ம் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் வறண்ட ஏரிகளுக்கும் திருப்பிவிட வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணி என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவும் அரசின் பரிசீலனையில் உள்ளது. விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் அரணாக திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரத்து 889 பயனாளிகளுக்கு ரூ.29 கோடியே 65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கிருஷ்ணகிரி புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.338.95 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.18.46 கோடி மதிப்பில் 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல ரூ.86.52 கோடி மதிப்பிலான 9 புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் 12 ஆயிரத்து 73 பயனாளிகளுக்கு ரூ.142.8 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.