அண்ணாசாலையில் பட்டப்பகலில் சம்பவம்: கோர்ட்டில் இருந்து வந்த ரவுடிகளை கொல்லவே வெடிகுண்டுகள் வீச்சு

சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த 2 ரவுடிகளை கொலை செய்யவே, வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-03-04 22:45 GMT
சென்னை, 

சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பயங்கர சத்தத்துடன் 2 குண்டுகளும் வெடித்து அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் கரும் புகை மண்டலத்தில் மூழ்கியது. ஆனால் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த பகுதியில் உள்ள கார் ஷோரூம் உரிமையாளர் காபர்கான் என்பவரின் கார் மட்டும் லேசாக சேதம் அடைந்தது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். கார் உரிமையாளர் காபர்கான் கொடுத்த புகார் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீசார் வெடிபொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தடயவியல் நிபுணர் ஷோபியாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வெடித்த குண்டு சிதறல்களை ஆய்வுக்காக எடுத்து சென்றார். வெடித்த குண்டுகள் சாதாரண ரக நாட்டு வெடிகுண்டுகளாகும். இந்த ரக குண்டுகள் வெடிக்கும்போது, பலத்த சத்தம் எழும்பும். கரும் புகையும் எழும். பொதுவாக ரவுடிகள் மோதலில் ஈடுபடும்போது, எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தி, சின்னாபின்னப்படுத்தி, பின்னர் அரிவாளால் வெட்டி போட்டுத்தள்ளுவதற்காக இதுபோன்ற நாட்டு வெடிகுண்டுகளை வீசுவார்கள்.

எனவே இதுபோன்ற நாட்டு வெடிகுண்டுகளை வீசியது யார்? யாரை குறிவைத்து இந்த குண்டுகள் வீசப்பட்டன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட கார் ஒன்றின் மீதுதான் குறிவைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. அந்த காரில் காக்காதோப்பு பாலாஜி, சி.டி.மணி என்ற 2 பிரபல ரவுடிகள் சென்றுள்ளனர். தாதா அந்தஸ்தில் உள்ள அந்த ரவுடிகளில் காக்காதோப்பு பாலாஜி வடசென்னையை கலக்குபவர். சி.டி. மணி தென் சென்னையை கலக்குபவர் ஆவார். இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று விட்டு வெளியில் வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பகலில், சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு, தங்களது காரில் வந்துள்ளனர். காரை அவர்களது வக்கீல் ஓட்டி வந்துள்ளார். காரில் பிரபல அரசியல் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

காரில் வந்த காக்காதோப்பு பாலாஜியையும், சி.டி.மணியையும் ஒரே நேரத்தில் கொலை செய்துவிட்டு, ஒரே கல்லில் 2 மாங்காய் பறித்துவிடலாம் என வடசென்னையின் மற்றொரு பிரபல ரவுடியான சம்போ செந்தில் சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதற்காக அவர் 16 பேர் கொண்ட கூலிப்படையை ஏவி உள்ளார். அவர்கள் 8 மோட்டார் சைக்கிள்களில், காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அண்ணாசாலையில் ஏதாவது ஒரு சிக்னலில் கார் நிற்கும்போது, ஒரு கும்பல் கார் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசி சின்னாபின்னமாக்கும். இன்னொரு கும்பல் அப்போது அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி, 2 ரவுடிகளையும் போட்டுத்தள்ள திட்டமிட்டு வந்துள்ளனர்.

அண்ணாசாலையில் 3 சிக்னல்களில் தாக்குதல் நடத்த வைத்த குறியில், ரவுடிகள் தப்பி விட்டனர். இதனால் அண்ணாமேம்பாலத்தில் வைத்து தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துள்ளனர். கூலிப்படை கும்பல் தங்களை பின்தொடர்ந்து வருவதை எப்படியோ, தெரிந்துகொண்ட 2 ரவுடிகளும், திடீரென்று அண்ணா மேம்பாலத்தின் மேலே செல்லாமல், பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று, அண்ணா மேம்பாலத்தின் கீழே 3 முறை சுற்றி வந்துள்ளனர். இதனால் கூலிப்படை கும்பலால் பின்தொடர்ந்து சென்று தாக்க முடியவில்லை.

இறுதியில் ரவுடிகள் 2 பேரும் அண்ணாசாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து எதிர்புறம், காமராஜர் அரங்கம் நோக்கி காரை ஓரமாக ஓட்டிவந்து, திடீரென்று காமராஜர் அரங்கம் அருகே உள்ள ஒரு வழிப்பாதை சாலையில் திரும்பிச்சென்று விட்டனர். இதனால் அவர்கள் கார் மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி விழுந்து வெடித்து விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக ரவுடிகள் இருவரும் தப்பி விட்டனர். குற்றவாளிகள் பிடிபட்டால்தான் முழுமையான விவரம் தெரியவரும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்