இந்திய வன அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு; சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 10 பேர் தேர்ச்சி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய வன அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேய பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகள், மத்திய மற்றும் மாநில அரசு பணிகள், காவல்துறை பணிகள், சிவில் நீதிபதிகள் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளுக்காக ஏராளமான ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கு சிறந்த பயிற்சியை அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு வழங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்திய வன அலுவலர் பதவிகளுக்கான (ஐ.எப்.ஓ.எஸ்.) தேர்வுக்கும் பயிற்சி அளித்தது. கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 90 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின்னர், 25 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்துக்குள் நடந்து கடக்க வேண்டும்.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதனை ஏராளமானோர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி வெளியானது. இதில் 1,145 பேர் தேர்ச்சி பெற்றனர்.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்த தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும்.
அதற்கான தேர்வு கடந்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது.
இந்த நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்தும் மனிதநேய பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களில் 10 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அவர்களில் 6 மாணவர்களும், 4 மாணவிகளும் அடங்குவார்கள்.
மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற அந்த 10 பேரில், ஆர்.ரம்யா அகில இந்திய அளவில் 15-வது இடத்தையும், எஸ்.கிருத்திகா 18-வது இடத்தையும், பி.தேவராஜ் 21-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளிலும் என பல்வேறு உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் மனிதநேய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இதுவரை 3,495 பேர் வெற்றி பெற்று பதவிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் கவுரவ பயிற்சி இயக்குனர் வக்கீல் கார்த்திகேயன் தெரிவித்தார்.