போலீஸ் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-03 21:15 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 2-ம் நிலை காவலர், சிறைத்துறை வார்டன், தீயணைப்பு வீரர் என மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது.

பின்னர் உடல் தகுதி தேர்வை முடித்து, சான்றிதழ் சரிபார்க்கும் பணியையும் முடித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 2-ந்தேதி தற்காலிக தேர்வு பட்டியலை வெளியிட்டது. இதில் 1,019 பேர் வேலூர் மாவட்டத்தையும், 763 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வேலூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை தமிழக போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, போலீஸ் எழுத்து தேர்வில் 2 பேர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அவர்களது பெயர் இறுதி தேர்ச்சி பட்டியலில் உள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து போலீஸ் தேர்வுக்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்று இடைக்கால தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘ஒரே தேர்வு மையத்தில் படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், எழுத்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தனி நீதிபதி தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த தடை உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதற்கு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநிலம் முழுவதும் நடந்த போலீஸ் தேர்வில், ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்கிறோம். இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்