மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து ஆணையர் ஆலோசனை சென்னையில் நடந்தது
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் கலெக்டர்களுடன் மாநில தேர்தல் கமிஷனர் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இதில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவால் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பதவிகளுக்கும், 27 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் கலெக்டர்களுடன் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாநில தேர்தல் கமிஷனர் ஆர்.பழனிசாமி தலைமை தாங்கினார். ஆணைய செயலாளர் இல.சுப்பிரமணியன், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) பெ.ஆனந்தராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக முடித்தது போன்று, நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட தேர்தல்களையும் சிறப்பாக நடத்திட கலெக்டர்களுக்கு பல உத்தரவுகளை கமிஷனர் பிறப்பித்து உள்ளார்.
மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பான கணக்கெடுக்கும் பணியை விரைவில் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு அளிப்பதுடன், தேர்தலையும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாநில தேர்தல் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.