போலி பத்திரிகையாளர்களை களையெடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்களை களையெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-10 22:15 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் சேகரன் என்ற பத்திரிகையாளர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் உண்மையான பத்திரிகையாளர் தானா? என்பதை தெரிந்துகொள்ள அவரது அடையாள அட்டையை, அவர் சார்பில் ஆஜரான வக்கீலிடம் கேட்டனர். இதன்படி, மனுதாரரின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வக்கீல் வழங்கினார். அவற்றை ஒவ்வொன்றாக நீதிபதிகள் சரி பார்த்தபோது, அதில் சிலை கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது.

கருப்பு ஆடுகள்

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும், போலீஸ் அதிகாரி காதர் பாஷாவுக்கும் என்ன தொடர்பு? காதர் பாஷாவின் போலீஸ் அடையாள அட்டை எப்படி மனுதாரர் வசம் வந்தது? என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-

பத்திரிகையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்களும் தங்களை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வது வேதனைக்குரிய விஷயமாகும். இவர்கள் தங்கள் பத்திரிகைகளையும் எளிதாக பதிவு செய்து விடுகிறார்கள்.

எனவே, பத்திரிகைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்கப்பட வேண்டும். பத்திரிகை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சங்கங்களில் போலி நிருபர்கள் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும். எனவே, பத்திரிகையாளர் என்ற பெயரில் தமிழகத்தில் உலாவி வரும் போலிகளை களையெடுக்க வேண்டும்.

சலுகைகள் இல்லை

இதுபோன்ற போலி பத்திரிகையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும். தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என்று போலீசார் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக செய்தி-மக்கள் தொடர்பு துறை செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் யூனியன், ரிப்போர்டர்ஸ் கில்டு ஆகியவற்றை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.

மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது? மனுதாரர் நடத்தும் பத்திரிகை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா? என்பது குறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்