குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தி.மு.க. பொய் பிரசாரம் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் குற்றச்சாட்டு
தமிழக மக்களை மத ரீதியாக பிரிப்பதற்காக குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தி.மு.க. பொய் பிரசாரம் செய்கிறது என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் குற்றம்சாட்டினார்.
திருச்சி,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆதரவு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, ஈரோடு, கோவையில் இந்த ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டு தலைவர்கள் பேசினார்கள். இதனை தொடர்ந்து திருச்சியில் ஆதரவு பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகில் பா.ஜனதா கட்சியினர் கையில் கொடியுடன் திரண்டனர். திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் மாவட்ட வாரியாக வரிசையாக நின்றனர்.
நடிகை கவுதமி
பாரத் மாதா கீ ஜெ கோஷம் முழங்கப்பட்டதும் பேரணி புறப்பட்டது. பேரணியின் நடுவில் ஒரு திறந்த ஜீப்பில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் (முன்னாள் எம்.பி), நடிகை கவுதமி ஆகியோர் நின்றபடி சென்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் பொய் பிரசாரம் செய்யாதே, தேச நலனிற்கு துணை நிற்போம், குடியுரிமை திருத்த சட்டம் இந்தியர்கள் யாரையும் பாதிக்காது என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே முடிவடைந்ததும் அங்கு மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் பேசியதாவது:-
பொய் பிரசாரம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள் தமிழகத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் தி.மு.க.வும் சில கட்சிகளின் தலைவர்களும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் அல்ல மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு கூட இந்த சட்டத்தை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.
இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று ஒரு நாளும், இன்னொரு நாள் மதம், இன ரீதியாக மக்களை பிரிக்கும் என்றும் தி.மு.க. தலைவர் பேசி வருகிறார். உண்மையில் தி.மு.க. தான் தமிழக மக்களை மத ரீதியாக பிரிப்பதற்காக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதனை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் தான் இந்த கூட்டத்திற்கு ஏராளமானவர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் கிளை
பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து 50, 60 ஆண்டுகளாக குடியுரிமை பெறாத சிறுபான்மையினத்தவருக்கு இந்த சட்டத்தின் படி குடியுரிமை வழங்கப்படும். அதே நேரத்தில் இந்திய பிரஜைகள் யாருக்கும் குடியுரிமை பறிபோகாது. பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று ஸ்டாலின் கேட்கிறார். அவருக்கு இந்தியாவில் உள்ளவர்களை பற்றி கவலை இல்லை. பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவாக அவர் அங்கே போய் பேசலாம். அங்கே தனது கட்சியின் ஒரு கிளையை கூட தொடங் கலாம்.
இலங்கை தமிழருக்கு குடியுரிமை
தி.மு.க. மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலினுக்கு இப்போது தான் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற ஞானோதயம் பிறந்து இருக்கிறது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு மோடி அரசு வழி செய்து கொடுத்து இருக்கிறது. அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் மோடி தயாராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.