உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -ஐகோர்ட்டு கேள்வி

உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-01-10 12:25 GMT
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பல்வேறு வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்  தெரிவித்துள்ளனர்.

முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்த இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையின் போது, உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை உட்பட தாக்கல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்களில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் ஜனவரி 13-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், வேட்பாளர்களின் ஆட்சேப மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்