ரேஷன் கடைகளில் 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
சென்னை,
ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று சென்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இத்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி தொடங்கிவைத்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்ததால் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவடைந்த நிலையில் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான 4 நாட்கள் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் விடுபட்டோருக்கு 13-ந் தேதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 4 நாட்களும் தெருக்கள் வாரியாக பரிசு தொகுப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்கள் விவரம் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டது.
முதல்நாளான நேற்று இப்பரிசு தொகுப்பை பெற பொதுமக்கள் அதிகளவில் வந்தனர். நீண்ட வரிசையில் ரேஷன் கடையில் காத்திருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரும் நிறுத்தப்பட்டனர்.
ரேஷன் கடைகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
பரிசு தொகுப்பு பெற பல இடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். சில கடைகளில் காலை 7, 8 மணிக்கெல்லாம் வந்து காத்திருந்து பரிசுத்தொகுப்பை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.
முதியோர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க செய்யாமல் நேரடியாக பரிசு தொகுப்பு பெற செய்யும் பணியில் போலீசார் உதவி செய்தனர்.
12-ந் தேதி வரை அந்தந்த தெருக்கள் வாரியாக ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாதோர் (விடுபட்டோர்) 13-ந்தேதி ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகவே வழங்கப்பட்டது. ஸ்மார்டு கார்டு இல்லாதபட்சத்தில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுடனும், ஆதார் அட்டை கொண்டுவரும் குடும்ப உறுப்பினரிடத்தில் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றவர்களிடம், ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது.
ரேஷன் கடைகளில் அரிசி கார்டுகளுக்கே பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பலர் சர்க்கரை அட்டைகளுடன் ரேஷன் கடைகளுக்கு பரிசுத்தொகுப்பு பெற வந்தனர். ஆனால் பரிசு தொகுப்பு இல்லை என்று தெரியவந்ததும், அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
அதேபோல சில கடைகளில் குடும்ப அட்டையில் உள்ள புகைப்படத்தில் உள்ளவர் மட்டுமே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.