ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளிவைத்தது.

Update: 2020-01-08 23:00 GMT
சென்னை, 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையினால் பொதுமக்களுக்கு பலவித நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கினர். 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி ‘சீல்’ வைத்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆலையை மூடி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியது.

அதே நேரம், இந்த ஆலையை அரசு மூடியது சரிதான் என்று தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் 39-வது நாளான நேற்று அனைத்து தரப்பு வக்கீல்களின் இறுதிக்கட்ட வாதங்கள் நடந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, ‘மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழியே இல்லை. ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீர் அதிகரித்துள்ளது, காற்று மாசு குறைந்துள்ளது. அந்த ஆலை 1997-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. எனவே, ஆலை மூடியதால் பலத்த நஷ்டம் என்று வேதாந்தா நிறுவனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்