தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கியது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. முதல் பாதியில் நல்ல மழை இருந்தாலும், நவம்பர் மாதத்தில் சற்று மழை குறைந்தது. பின்னர் மீண்டும் ஓரளவு மழை பெய்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 44 செ.மீ. மழையை பெறும். இந்த ஆண்டு 45 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பை விட மழை அதிகமாக பதிவாகி இருக்கிறது. மதுரை, வேலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இயல்பை விட 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மழை குறைவாக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் வறண்ட வானிலையும், அதேபோல் வடகிழக்கு காற்று விலகி, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து குளிர்ச்சியான காற்று வீசுவதையும் கணக்கிட்டு வடகிழக்கு பருவமழை நிறைவு பெறுவதாக கருத்தில் கொள்ளப்படும். அந்தவகையில் தமிழகத்தில் தற்போது பரவலாக வறண்ட வானிலையே நிலவுகிறது’ என்றனர்.