நாளை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் விவரத்தை அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவு

நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் விவரத்தை அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-07 14:13 GMT
சென்னை,

தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல துறைகளில் உள்ள தொழிலாளர்கள்,  மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று ஜனவரி 8, 9 ஆகிய இரு நாள்கள் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி (நாளை) அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் வரும் 8 ஆம்  தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என்றும் அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் விவரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி இயக்குனர்கள், காலை 10.30 மணிக்கு  பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த விவரங்கள் காலை 11 மணிக்கு தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனித்தனியாக அறிக்கை அனுப்பவும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்