தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-01-04 21:26 GMT
சென்னை,

அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பி.எச். பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்திகேட்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பி.எச்.பாண்டியன் மீது தலைவர் கருணாநிதி அளவு கடந்த அன்பு வைத்திருந்ததை நான் அறிவேன்; அதற்கு காரணம் அவரிடம் குடிகொண்டிருந்த திராவிட நோக்கும், பார்வையும், சுயமரியாதையும், போர்க்குணமும் ஆகும். இத்தகைய தன்மைகள் தன்னிடம் இருந்து பிரிக்க முடியாதவை என்பதை அஞ்சா நெஞ்சத்துடன் பிரகடனப்படுத்தும் வகையில் தனது கருத்துகளை ஆணித்தரமாகவும், சட்டபூர்வமாகவும் எந்த அரங்கத்திலும் எடுத்து வைப்பதில் பி.எச்.பாண்டியனுக்கு நிகர் அவர்தான் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

அவரது மறைவு அரசியல் தலைவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பி.எச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-

தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். இப்படி திடீரென இயற்கை எய்தியது அறிந்து மிகமிக வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்துள்ள அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் ம.தி.மு.க. சார்பில் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க.வின் தொடக்க கால தலைவர்களில் ஒருவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். பா.ம.க. வின் சமூக நீதிக் கொள்கையையும், அதற்காக நான் நடத்திய போராட்டங்களையும் பல்வேறு தருணங்களில் அவர் வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார். பி.எச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை வழங்கிடவும், அன்னாரின் ஆன்மா நற்கதியடையவும் எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்:-

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சபாநாயகர் என்பவர் நடுநிலையாளர். அந்தப்பணியை சிறப்பாக செய்து, நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசர் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்