நாளை மறுநாள் கூடுகிறது சட்டப்பேரவை

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்க உள்ளது.

Update: 2020-01-04 12:10 GMT
சென்னை,

2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. 2020-ம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி முடிக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவி ஜனவரி 6-ம் தேதி பதவியேற்கிறார்கள்.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூடுவதால் அந்த முடிவுகள்  மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெறும்.

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதால், பேரவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை ஜன.6-ம் தேதி கூடும் நிலையில், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமைகள் சட்ட திருத்தம் உள்ளிட்ட 6 சட்ட திருத்தங்களுக்காக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டங்கள் பேரவையில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

6-ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் 10-ம் தேதி வரை  நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்