உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பா.ம.க. என்பது நிரூபணம் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சி
உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பா.ம.க. என்பது நிரூபணமாகியுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க. தலைமையிலான அணி வென்ற இடங்களை விட தி.மு.க. தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். ஊரக உள்ளாட்சி தேர்தல் அனைத்து மாவட்டங்களுக்கும் நடத்தப்பட்டிருந்தால் அ.தி.மு.க. அணிதான் முதலிடம் பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேச்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி பா.ம.க. தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க. உவப்புடன் ஏற்றுக்கொள்கிறது. அடுத்து நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்கள், தமிழ்நாடு முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள பா.ம.க. தயாராக உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் பா.ம.க.வின் வெற்றிக்காக உழைத்த அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.