ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்களித்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் நன்றி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.
முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். 27 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தமது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கிறது. இது, அ.தி.மு.க. அரசின் சாதனைக்கு மக்கள் அளித்த பரிசு. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.