ஒரு மணி நேரத்தில் காட்சிகள் மாறின: ஜெயித்தவர் தோற்றார்... தோற்றவர் ஜெயித்தார்... ருசிகர சம்பவம்
ஏற்காட்டில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது, ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டவர், தோற்றதாகவும், தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் ஜெயித்ததாகவும் ஒரு மணி நேரத்தில் காட்சிகள் மாறிய ருசிகர சம்பவம் நடந்தது.
ஏற்காடு,
சினிமாவில் தான் அதிரடி திருப்பங்களுடன் காட்சிகள் அமைக்கப்படும் என்றால், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையிலும் அதிரடி திருப்பங்களுடன் ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அ.தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தி.மு.க. பெண் பிரமுகர் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஒரு மணி நேரத்தில் இந்த களேபர காட்சி நடந்து முடிந்தது. தோற்றவர் ஜெயித்தார்... ஜெயித்தவர் தோற்றார்... என்ற ரீதியில் நடந்த இந்த ஓட்டு எண்ணிக்கை பற்றிய விவரம் வருமாறு:-
சாலைமறியல்
ஏற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மநத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கை ஏற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தொடங்கி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில், மாலை 6.30 மணியளவில் அ.தி.மு.க. பிரமுகர் சரோஜா தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. பிரமுகர் ரஞ்சிதம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் புகார் மனு கொடுத்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் மையத்திற்கு வெளியே சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது தி.மு.க.வினர் கூறியதாவது:-
ஓட்டு எண்ணிக்கையில் ரஞ்சிதம் தான் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த சரோஜா ஒரு கட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை விட்டே வெளியேறி விட்டார். ஆனால் அதன்பிறகு அதிகாரிகள் அ.தி.மு.க. பிரமுகர் சரோஜாவை திடீரென வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இந்த மோசடி அறிவிப்பு வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெயித்தவர் தோற்றார்... தோற்றவர் ஜெயித்தார்...
இது தொடர்பாக அதிகாரிகளிடம் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செம்மநத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் குறித்த மறு அறிவிப்பை அதிகாரிகள் வெளியிட்டனர்.
அப்போது தோற்றதாக அறிவிக்கப்பட்ட ரஞ்சிதம் வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சரோஜா தோற்றதாகவும் அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் களேபரமாக காட்சி அளித்த அந்த வாக்கு எண்ணும் மையத்தில் இயல்பு நிலை திரும்பியது.
அதே நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.