இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மொழியை சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மொழியை சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2020-01-02 21:30 GMT
சென்னை,

முத்தமிழ் பேரவையின் 40-ம் ஆண்டு இசை விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, கருணாநிதியின் சிலையை திறந்துவைத்தார்.

இயல் செல்வம் விருது சுகிசிவத்துக்கும், ராஜரத்னா விருது மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணனுக்கும், இசைச்செல்வம் விருது டி.என்.கிருஷ்ணாவுக்கும், நாட்டிய செல்வம் விருது ஜாகிர் உசேனுக்கும், தவில் செல்வம் விருது திருக்கடையூர் டி.ஜி.பாபுவுக்கும் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கருணாநிதி சிலை

அண்ணா அறிவாலயத்திலும், பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டிலும், அண்ணா பிறந்த மண்ணான காஞ்சீபுரத்திலும், திருப்புமுனைகளை தந்த திருச்சியிலும், கருணாநிதியின் திரைத்துறைக்கு அடித்தளமிட்ட சேலத்திலும், முரசொலி வளாகத்திலும், முத்தமிழ் பேரவை வளாகத்திலும் கருணாநிதி சிலையை திறந்துவைத்து இருக்கிறோம்.

ஒவ்வொரு ஊர்களிலும் நாம் சிலையை திறக்கத்தான் போகிறோம். அதற்கு காரணம், கருணாநிதி எல்லா ஊர்களோடும் தன்னை இணைத்துக் கொண்டவர்.

முத்தமிழுக்கு சோதனை

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திறப்பது, அவர்களை பெருமைப்படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்கு காட்ட வேண்டிய நன்றியை இதன்மூலம் நிரூபித்து கொண்டுள்ளோம். முத்தமிழ் பேரவையை உயிராக இருந்து கவனித்தவர், கருணாநிதி. இனி சிலையாக இருந்து அதனை கவனிப்பார்.

இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழை காப்பதுதான். நாட்டில் முத்தமிழுக்கு சோதனை வந்து இருக்கிறது. அந்நிய மொழிகளை புகுத்தி, நம்முடைய தாய்மொழியை சிதைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். அதனை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அந்த வல்லமை தமிழுக்கு நிச்சயம் உண்டு.

தொட முடியாது

ஒருவர் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் தமிழை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். தமிழை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டாக வேண்டும்.

கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இப்படி அவர்கள் செய்ய முடிந்ததை செய்து காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை தமிழ் மொழிக்கு செய்தால், இந்த மொழியை, இனத்தை எவனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முத்தமிழ் பேரவையின் செயலாளர் பி.அமிர்தம் வரவேற்றார். டி.வி.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் இறுதியில் முத்தமிழ் பேரவை துணை செயலாளர் வழுவூர் ரவி நன்றி கூறினார். விழாவில் மு.க.தமிழரசு, கவிஞர் வைரமுத்து, முத்தமிழ் பேரவை பொருளாளர் ஈ.வி.ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்