வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடாததை எதிர்த்து திமுக வழக்கு
உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை,
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவரை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,
திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கிறது. திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர்.
மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தேன் என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
மேலும் இம்மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக இன்று விசாரணை நடத்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. நாளை காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு ஒப்புதல் அளித்தது.
உயர்நீதிமன்ற புதிய விதிமுறை காரணமாக இன்று விசாரிக்க இயலவில்லை என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.