மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.20 உயர்ந்தது 4 மாதங்களில் ரூ.127 அதிகரிப்பு

மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.20 உயர்ந்து உள்ளது. 4 மாதங்களில் ரூ.127 அதிகரித்துள்ளது.

Update: 2020-01-01 23:12 GMT
சென்னை,

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொருத்தும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் முதல்தேதியையொட்டி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட தேவைக்கு மானியம் இல்லாத சிலிண்டர்களைத்தான் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தியாக வேண்டும்.

விலை உயர்வு

மானியம் இல்லா சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலை நேற்று நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு விவரம் வருமாறு:

சென்னையில் ரூ.20, மும்பையில் ரூ.19.50, கொல்கத்தாவில் ரூ.21.50, டெல்லியில் ரூ.19 உயர்ந்துள்ளது.

விலை உயர்வுக்கு பின்னர் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.734 ஆக உள்ளது. இதுவே மும்பையில் ரூ.684.50, கொல்கத்தாவில் ரூ.747, டெல்லியில் ரூ.714 ஆக இருக்கிறது.

4 மாதத்தில் ரூ.127 உயர்வு

கடந்த செப்டம்பர் மாதம் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.606.50 காசுகளாக இருந்தது. அக்டோபரில் ரூ.13.50 காசு அதிகரித்து ரூ.620-க்கு விற்பனையானது. நவம்பரில் இன்னும் கூடுதலாக ரூ.76 அதிகரித்து ரூ.696-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பரில் ரூ.18 அதிகரித்து ரூ.714-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.20 அதிகரித்து ரூ.734-க்கு விற்பனையாகிறது.

கடந்த 4 மாதத்தில் மட்டும் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.127.50 காசு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக சிலிண்டர்

19 கிலோ எடை கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வர்த்தக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1,333 ஆக இருந்தது. தற்போது, ரூ.30 அதிகரித்து ரூ.1,363 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்