சென்னையில் அடிக்கடி போராட்டம் நடத்தும் சில இயக்கங்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பா? விசாரணை நடப்பதாக கமிஷனர் தகவல்

சென்னையில் அடிக்கடி போராட்டம் நடத்தும் சில இயக்கங்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடப்பதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

Update: 2020-01-01 22:37 GMT
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சென்னையில் கோலம் போடும் போராட்டத்தை நடத்திய யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் போலீஸ் தடையை மீறி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் முன்பு ஏற்கனவே போட்ட கோலத்துக்கு அருகில் சிலர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை வேண்டும் என்றே எழுதி உள்ளனர்.

இதற்கு அந்த வீட்டில் வசித்து வரும் 92 வயது நிரம்பிய பெரியவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட சிலர் தேவை இல்லாமல் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். (இதுதொடர்பான வீடியோ பதிவு காண்பிக்கப்பட்டது).

அதுபற்றிய தகவல் கிடைத்த பின்னர் தான் போலீசார் சென்று அவர்களை பிடித்து வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

பாகிஸ்தானுடன் தொடர்பா?

கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி கந்தாடை என்ற பெண் பாகிஸ்தான் நாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அவருடைய செயல்பாடு பற்றி விசாரணை நடக்கிறது.

சென்னையில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடும் ‘அறப்போர் இயக்கம்’, ‘வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா’ உள்ளிட்ட சில அமைப்புகள், இயக்கங்களின் செயல்பாடுகள் பற்றியும், பாகிஸ்தானுடன் அவர் களுடைய தொடர்புகள் எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 700 வாகனங்கள் பிடிபட்டன. புத்தாண்டு கொண்டாட விபத்தில் காயமடைந்தவர்கள் மிகவும் குறைவான பேர் தான் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

மெக்கானிக்குகள் மீது நடவடிக்கை

புத்தாண்டு தினத்தன்று நடந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக இறக்கவில்லை. ‘பைக் ரேஸ்’ நடத்துபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பைக் ரேசில் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை தயார் செய்து கொடுக்கும் மெக்கானிக்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்