கடந்த ஆண்டில் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 2,200 சிறுவர்கள் மீட்பு ரெயில்வே போலீசார் தகவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரெயில்நிலையங்களில் சுற்றித்திரிந்த 2,239 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டில் (2019) ரெயில்வே போலீசார் (இருப்புப்பாதை) சார்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரம் வருமாறு:-
* ரெயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ஈரோடு, சேலம் ரெயில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மராட்டியத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண் பயணிகளை குறிவைத்து நகை பறித்த மராட்டியத்தை சேர்ந்த மேலும் 4 பேர் பிடிபட்டனர்.
* எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து பயணிகளிடம் கொள்ளையடித்து, சிங்கப்பூரில் நட்சத்திர ஓட்டல் நடத்திய கேரளாவை சேர்ந்த சாகுல்அமீது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 131 பவுன் தங்கநகை, ரூ.2 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
93 பேர் தற்கொலை
* மின்சார ரெயில்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டியதாக மரகதம் என்கிற சத்யா, அவரது கூட்டாளி வேலூரை சேர்ந்த தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோனிஷா என்பவரும் சிக்கினார். அவர்களிடம் இருந்து 151 பவுன் நகை, ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்டது.
* ரெயில் நிலையங்கள், ரெயில்வே தண்டவாள பகுதிகளில் 2,393 பேர் மரணம் அடைந்தனர். இதில் 1,760 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றில் 93 பேர் தற்கொலை செய்து கொண்டதும், 1,993 பேர் விபத்தில் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சிறுவர்கள் மீட்பு
* திருச்சி ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 827 சிறுவர்கள், சென்னை எல்லையில் சுற்றித்திரிந்த 1,412 சிறுவர்கள் என மொத்தம் 2,239 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
* ரெயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்கு, காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. குற்றச்சம்பவங்கள் தொடர்பாக 1512, 9962500500 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.