புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2020 புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சென்னை,
புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் தாமிர சபை முன்பு திருவெம்பாவை வழிபாடு நடைபெறும். மார்கழி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே நெல்லையப்பர் கோவில் திறக்கப்பட்டு, சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பத்தாம் நாள் அதிகாலையில் தாமிர சபையில் நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன்கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் விடிய விடிய மலைக்கோவில் மாட வீதிகளில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
தமிழக திருப்பதி என்றழைக்கப்படும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் புத்தாண்டையொட்டி மூலவர் ஒப்பிலியப்ப சுவாமி ராஜஅலங்காரத்திலும், உற்சவர் என்னப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
12 ஜோதிர் லிங்கங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் விதமாக, பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் ஜோதிர்லிங்க தரிசனம் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மக்கள் முன் பல்வேறு வகையான ஆரத்தி எடுத்து வழிபாடு நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் ஆலயத்தில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நிலையில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
புத்தாண்டையொட்டி வாடிகனில் கூடிய ஆயிரக்கணக்கானோருக்கு போப் பிரான்சிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பெண் ஒருவர் அவரது கையை பிடித்து குலுக்கி வாழ்த்துச்சொல்ல முயன்றபோது, வேகமாக கையை உதறியவாறு போப் பிரான்சிஸ் சென்றார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் அங்கு திரண்டிருந்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக மக்கள் நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நாசரேன் சூசை தலைமையில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
திருச்சி, கொடைக்கானலில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.