தமிழக நீர்த்தேக்கங்களில் 202 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் 90 சதவீதம் அதாவது 202 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு இருப்பதாக தமிழக குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

Update: 2022-12-19 23:48 GMT

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் மழையே வடகிழக்கு பருவமழை காலமாகும். இதன்மூலம் தமிழகம் 60 முதல் 70 சதவீதம் வரை மழை பெறுகிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் இம்மாதத்திலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து கடந்த 18-ந்தேதி வரை பெய்த மழை அளவு 425.1 மில்லி மீட்டராகும். ஆனால் இயல்பான மழை அளவு என்பது 419 மில்லி மீட்டராகும். இயல்பை விட 1 சதவீதம் மட்டுமே கூடுதலாக மழை பெய்துள்ளது.

இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் இவற்றுடன் தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்தது.

202 டி.எம்.சி. இருப்பு

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரத்து 138 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் இதுவரை 4,647 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. 2 ஆயிரத்து 790 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 2 ஆயிரத்து 820 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2 ஆயிரத்து 188 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 1,607 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) இதில் தற்போது 11 ஆயிரத்து 358 மில்லியன் கன அடி (11.358 டி.எம்.சி.) நீ்ர் இருப்பு உள்ளது. இது 85.91 சதவீதமாகும்.

தமிழகம் முழுவதும் உள்ள மேட்டூர் உள்ளிட்ட அணைகள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ளிட்ட 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடியாகும் (224.297 டி.எம்.சி.). ஆனால் நேற்றைய நிலவரப்படி தற்போது 2 லட்சத்து 2 ஆயிரத்து 490 மில்லியன் கன அடி (202.490 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. இது 90.28 சதவீதமாகும்.

குடிநீர் வினியோகம்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் குடிநீர் சேமிப்பு 11 டி.எம்.சி.யை கடந்துள்ளது. இதனால் அடுத்த 11 மாதங்களுக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

தற்போது ஏரிகளில் போதுமான நீர் சேமிக்கப்பட்டு வருவதால் சென்னை மாநகர பகுதிகளுக்கு 1,007 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வினியோகம் செய்யப்படுகிறது. இதே அளவு குடிநீர் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்