உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை : மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-07 13:24 GMT
சென்னை ,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதன்படி, வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுகளை பின்பற்றாமல் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதியை  அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தாதது ஏன்? நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.

அதிமுக அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்திற்கு வெட்க கேடு. வார்டு வரையறை,இடஒதுக்கீடு செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் அதற்குள் புதிய தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையத்துக்கு கண்டனங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்