புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 120 கைதிகள் கை, கால் முறிந்து தவிப்பு
புழல் சிறையில் 120 கைதிகள் கை, கால் முறிந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சிறை ஆஸ்பத்திரி டாக்டர்கள் திணறி வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னை புழல் சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சமீப காலமாக குற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படும் பல கைதிகள் கை, கால்களில் முறிவுடன் அடைக்கப்படுகின்றனர். புழல் சிறையில் தற்போது 120-க்கும் மேற்பட்ட கைதிகள் கை, கால் முறிவுடன் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் தப்பி ஓடும்போதும், கழிவறையிலும் வழுக்கி விழுவதால் இதுபோல் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு விடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் காஞ்சீ புரம் மாவட்டம் வேங்கடமங்களத்தில் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சரண் அடைந்த விஜயை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு நீதிபதி காயத்ரிதேவி, “விஜய், கழிவறையில் வழுக்கி விழுந்து படுகாயம் அடையாதவாறு பார்த்து கொள்ளும்படி” தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு அறிவுரை வழங்கினார்.
டாக்டர்கள் திணறல்
புழல் சிறையில் கை, கால் முறிந்து தவிக்கும் கைதிகளுக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிலரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதும் வழக்கம்.
ஆனால் புழல் சிறையில் 2 டாக்டர்கள் மற்றும் 3 ஆண், 3 பெண் என மொத்தம் 6 செவிலியர்கள், ஒரு மருந்தாளுனர் மட்டுமே உள்ளனர். சமீப காலமாக எலும்பு முறிவுடன் சிறைக்கு வரும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்குள்ள டாக்டர்கள் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
கைதிகளை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்போது பாதுகாப்புக்காக போலீசார் தேவைப்படுகிறார்கள். ஆனால் போதிய போலீசாரும் இல்லாததால் கைதிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு சிறை மருத்துவ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக தெரிகிறது. அதில் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியிலும் கூடுதல் வசதி செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.