போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 மகன்களுடன் ஊர்க்காவல் படை வீராங்கனை தீக்குளிக்க முயற்சி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்ய கோரிக்கை

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 மகன்களுடன் ஊர்க்காவல் படை வீராங்கனை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-22 23:09 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கோரிகுளம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டர். இவருடைய மனைவி நிரோஷா(வயது 21). இவர்,் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சங்கரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நிரோஷா வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு சங்கரை சிங்கப்பூருக்கு அனுப்பாமல் ஏமாற்றி விட்டனர்.

மிரட்டல்

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனை நேரில் சந்தித்து நிரோஷா புகார் அளித்தார். அந்த புகாரை தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால் பணத்தை வாங்கியவர்கள் தாங்கள் ஆளும்கட்சி பிரமுகருக்கு சொந்தக்காரர்கள் என கூறி நிரோஷாவை மிரட்டினர்.

தீக்குளிக்க முயற்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது 2 மகன்கள் மற்றும் தனது தந்தையுடன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர் தான் கொண்டு வந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து மகன்கள், தந்தை மீது ஊற்றியதுடன், தன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து மண்எண்ணெய் பாட்டிலை தட்டி விட்டதுடன், அவர்களை அங்கிருந்து மீட்டு போலீஸ் சூப்பிரண்டு அறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டிடம் நிரோஷா மீண்டும் புகார் மனு அளித்தார். “எங்களை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். அதற்கு முன்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்