மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது - முதல்வர் பழனிசாமி

மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update: 2019-11-22 07:10 GMT
சென்னை

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி  மாவட்டம் உதயமானது . தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து  5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

தாமிரபரணி-நம்பியாறு-கருமேணி ஆறுகள் இணைப்பு திட்டம் 2020 டிசம்பர் 20ம் தேதி செயல்படுத்தப்படும். நெகிழி தடைக்கு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது.

ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது . 

பல்வேறு சூழ்ச்சிகளை செய்து உள்ளாட்சி தேர்தலை தடை செய்ய ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நிச்சயம் நடத்தும்.

கடந்த 2006 ஜூன் 31-ல் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அசாம், குஜராத் போன்ற மாநிலத்தில் மறைமுகத் தேர்தல் நடக்கிறது. விழுப்புரம், விருத்தாச்சலம் 2 நகராட்சிகளில் நேரடித் தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால்தான் மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்காது  எனப் பேசி மறைமுகத் தேர்தலை நியாயப்படுத்தினார்.

அதற்கு முன்னதாக 1996 வரை உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்தான் இருந்தது. நேரடித் தேர்தலைக் கொண்டு வந்ததும் திமுக தான். அதனைத் தொடர்ந்து மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததும் திமுக தான். இப்படி ஒரு சூழலில் மறைமுகத் தேர்தல் என ஸ்டாலின் சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் தவறா?

இது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. திமுக இரட்டை வேடம் போடுவதை விளக்கிக் கொண்டே செல்லலாம்.

கொள்கை முடிவை எடுப்பதும் அதை மாற்றி அமைப்பதும் மாநில அரசின் முடிவு. இதை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விளக்கியிருக்கிறார்.

மறைமுகத் தேர்தலைக் கொண்டு வந்ததற்கு தோல்வி பயம் காரணம் எனவும் திமுகவினர் விமர்சிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அன்று அப்படிக் கொண்டுவந்தது சரியா? மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது என கூறினார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 70 நிமிடங்கள் பேசினார்.

மேலும் செய்திகள்