பிரசவித்த பெண்ணின் உடலில் ஊசியை வைத்து தைத்ததால் பரபரப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண்ணின் உடலில் ஊசியை வைத்து தையல் போட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்,
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண்ணின் உடலில் ஊசியை வைத்து தையல் போட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பிரசவம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டிவலசை சேதுபதி நகரை சேர்ந்தவர், கார்த்திக். அவருடைய மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டு் ஆகிறது. இந்தநிலையில் கர்ப்பம் அடைந்த ரம்யா, பிரசவத்துக்காக கடந்த 17-ந் தேதி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தையல் போடப்பட்டது.
அதன் பின்னர் வீடு திரும்பிய ரம்யாவுக்கு 3 நாட்களுக்கு பிறகு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உறவினர்கள், ரம்யாவை மீண்டும் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளனர். அங்கிருந்த டாக்டர்கள், அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
உடலுக்குள் ஊசி
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, ரம்யாவுக்கு தையல் போட்ட இடத்தில், முறிந்த நிலையில் உள்ளே ஊசி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரம்யாவின் உறவினர்கள், கிராம மக்கள் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டு, தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை மருத்துவ துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மதுரையில் அறுவை சிகிச்சை
இதற்கிடையே, மதுரைக்கு கொண்டு வரப்பட்ட ரம்யா, மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மகப்பேறு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை ரம்யாவிற்கு அறுவை சிகிச்சை நடந்தது.
அவரது உடலில் இருந்த 2 சென்டி மீட்டர் நீளமுள்ள ஊசி அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது ரம்யா நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செவிலியர் பணி இடைநீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் செவிலியர் அன்பு என்பவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டனர்.