இந்தியாவிலேயே ‘தொன்மையான மொழி தமிழ் என்று கீழடி அகழ்வாராய்ச்சி நிரூபித்துள்ளது’ நீதிபதி கிருபாகரன் பேச்சு
இந்தியாவிலேயே தொன்மையான மொழி தமிழ் என்று கீழடி அகழ்வாராய்ச்சி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளதாக நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.;
சென்னை,
இந்தியாவிலேயே தொன்மையான மொழி தமிழ் என்று கீழடி அகழ்வாராய்ச்சி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளதாக நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.
உலக தமிழ் விருதுகள்
‘தி ரைஸ்’ உலக தமிழ் விருதுகள் வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் நீதிபதி என்.கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். நீதிபதி ஆர்.மகாதேவன், அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில், வாழ்நாள் தமிழ் சமூகத்துக்கான சிந்தனை பங்களிப்பு விருது வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதனுக்கும், மனசாட்சியின் குரல் விருது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.தேவசகாயத்துக்கும், சமூக ஒற்றுமைக்கான விருது மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் லில்லியன் ஜாஸ்பருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் ஆச்சி மசாலா நிறுவனத்தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக்கிற்கு உலகத்தமிழ் தொழில் சுடர்ஒளி விருதும், மதுரை ஜல்லிக்கட்டு வீரர் ரஞ்சித்துக்கு தமிழ் வீரம் விருதும் என மொத்தம் 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ‘தி ரைஸ்’ அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:-
தொன்மையான மொழி
தமிழகத்தில் தமிழ் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் தமிழ் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சென்று வெளிநாட்டில் இருப்பவர்கள் தமிழை வளர்க்கிறார்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். நாதியற்று, நாடு இல்லாமல் ஓடி பிழைத்த இலங்கை தமிழர்கள் தான் அதை செய்கிறார்கள். அவர்கள் அகதிகளாக சென்ற இடம் எல்லாம் தமிழ் வளர்கிறது.
தமிழ் மொழியை காக்க கனிமொழி என்ற வக்கீல் வேண்டி இருக்கிறது. அவர் போட்ட வழக்கில் தான் கீழடியை கண்டுபிடித்தார்கள். கீழடியில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து தான் தமிழ் மொழி 2,600 வயதுடைய முதுமொழி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் மொழிகளிலேயே தமிழ்மொழி தொன்மையானது என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலமாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.