தமிழக அரசியலில் வெற்றிடம்: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி
தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறிய நடிகர் ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், போபாலில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் விருப்பம்
படவாய்ப்புகள் குறைந்ததால் நான் அரசியலுக்கு வருவதாக முதல்-அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவிக்கிறார். தொடர்ந்து அதேபோல் சொல்லிக்கொண்டு இருப்பதால் அது உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை.
ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது என்பது அவர்களின் கருத்து.
வழிமொழிகிறேன்
தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறிய நடிகர் ரஜினியின் கருத்தை வழிமொழிவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் ரஜினிதான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்பது மு.க.அழகிரியின் கருத்து. நாட்டில் இதற்கான சுதந்திரம் உள்ளது.
நல்ல தலைமைக்கு ஆள் இல்லை என்பதுதான் வெற்றிடம். நல்ல தலைமை இருந்தார்கள் என்பதில் பொய் இல்லை. அதை மறுக்கவும் முடியாது. இன்று இல்லை என்று சொல்வதற்கு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு
நல்லவர்கள், வலிமையானவர்கள் தலைமை ஏற்றாலும் பிசவுகள் நடக்காமல் இருக்காது. அதற்கு விமர்சனங்கள் வந்தே தீரும். அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை பழைய தலைவர்களுக்கு இருந்தது. நவீன தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் பங்காளியாக இது என்னுடைய கருத்து.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.